வெல்லவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 13 பேரையும் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லவாய நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் விநியோகிப்பதற்கான எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பெட்ரோல் பங்கில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதன் பின்னர், பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது கற்கள் மற்றும் போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கும் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 Comments